Koothanallur

Koothanallur
Land mark

Sunday, 23 September 2012

ஒன்றிணைவோம் வாருங்கள்:


அன்பார்ந்த நண்பர் முஹம்மது அப்துல்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

சற்றே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தாங்கள் எழுதியிருந்த கடிதம் கண்டேன்.

உன்னதமான நோக்கத்தோடு, சமுதாய நலன் கருதி, நீண்ட ஆய்வுகளுக்குப்பிறகு, ஒரு பொதுப் பிரச்னையை வெளிப்படுத்த முடிவு செய்த நீங்கள் பெயர் விபரம் இல்லாமல் வெளியிட்டது உங்கள் தவறு. இப்போது கொடுத்துள்ள விபரத்தை அப்போதே கொடுத்து இருந்தீர்கள் என்றால் இந்த வினா எழுப்புவதற்கு வேலையே இல்லாமல் போயிருக்கும். “நல்ல நோக்கத்தோடு வெளி வந்திருக்கும் இந்த ஈமெயில், பெயரில்லாமல் கோழைகள் அனுப்பும் ஈமெயில் கூட்டத்தில் சேர்ந்து விடக்கூடாதே!” என்ற கவலையில் தான் அப்படி வினவி இருந்தேன். முதலில் நாம் கை குலுக்கிக்கொள்வோம்...!

அடுத்து, "பத்த வைக்கிறாங்கப்பா!" என்ற அர்த்தத்தில் நான் அப்படி எழுதவில்லை. பிரச்சினை என்று ஒன்று வெடித்தால் தான் தீர்வு என்று ஒன்று வெளிப்படும் என்பதை உணர்த்தும் நோக்கமே அந்த வார்த்தைகள். நம் சமுதாய நலனுக்காக ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ய முன்வரும் அனைவரையும் இரு கரம் தழுவி வரவேற்கிறேன். உங்கள் கடிதத்தில் உள்ள வாக்கியங்களில் பல, என்னுடைய எதிர்பார்ப்புக்களை எகிற வைக்கிறது. உங்களின் நல் முயற்சிகள் அனைத்திற்கும் வல்ல நாயன் வெற்றியைத் தருவானாக...! ஆமீன்...!!

மன்ப உல்-உலா பள்ளியில் அதிகமான மதிப்பெண் பெற்றும் முதல் குரூப் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட (நீங்கள் குறிப்பிட்டதைப்போல மாற்று மத மாணவர்களுக்கு 300 மார்க், இஸ்லாமிய மாணவர்களுக்கு 400 மார்க் என்ற வேறுபாடு) மாணவன் யார் என்பதை வெளிப்படுத்துங்கள். இதையும் உங்கள் வாதம் தவறு என்று நிரூபிப்பதற்காக இங்கே கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட அந்த மாணவன் சார்பாக நீதிமன்றத்திலே பொது நல வழக்கு ஒன்றை என் சொந்த செலவில் பதிந்து, அந்த மாணவனின் சேர்க்கைக்கு நீதிமன்ற உத்தரவை இன்ஷா அல்லாஹ் பெற்றுத்தருகிறேன்

இதே போல் இஸ்லாமிய பட்டதாரி இளைஞர்கள் யாரும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து விட்டு, முறையான காரணங்கள் இல்லாமல் ஆசிரியர் வேலை மறுக்கப்பட்டிருந்தால், அவர்களையும் வெளியே கொண்டு வாருங்கள்.  அவர்கள் சார்பாக நீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெறுவோம். தனி நபராகவோ, இயக்கங்கள் சார்பாகவோ விளக்கங்கள் கேட்டால் உதாசீனப்படுத்தப் படலாம். நீதிமன்றத்திலே வழக்கு என்று வந்து விட்டால் விபரங்கள் அனைத்தையும் அவர்கள் சமர்ப்பித்து தானே ஆக வேண்டும். இப்படிப்பட்ட பிரச்சனைகளை சமயோசிதமாக எதிர்கொள்ள இது ஒன்று தான் சரியான வழி. இப்படி ஒன்றிரண்டு வழக்குகள் விழுந்தால் தான் "உள் அறுப்பு" வேலை செய்பவர்களுக்கும் உதறல் எடுக்கும்இதை "நான்" என்ற தனி நபரால் சாதித்து விட முடியாது. என்னுடைய இந்த கருத்தை ஆமோதிப்பவர்கள் எல்லாம் ஓர் அணியாக ஒன்று திரள்வோம்!

அடுத்து, உங்கள் கடிதத்தில் "நண்பன், மனைவி, துரோகம், வேலி, பயிர்" என்று சில வாக்கியங்களால் உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தீர்கள். மீண்டும் உங்களிடம் இருந்து இங்கே நான் கருத்து வேறுபடுகிறேன். "மயங்கும் நிலையிலும், மடங்கும் நிலையிலும்" பெண்கள் இருப்பதால் தானே மயக்குபவர்களும், மடக்குபவர்களும் வெற்றி பெறுகிறார்கள். என்ன தான் உயிர் நண்பன் என்றபோதிலும் அளவு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா? குடும்ப பெண்களிடம் அன்னியோன்யமாக பழகவும், அந்தரங்கமாக பேசவும் கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது யார்?? இதெற்கெல்லாம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் அல்லவா பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். "செருப்பால் அடிப்பேன்டா நாயே! என் குடும்ப பெரியவர்களிடம் சொல்லவா?" என்று பெண்கள் சீறிப் பாய்ந்தால் சீண்டுபவன் சிதறி ஓட மாட்டானா??? 

ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் மலாயா, சிங்கப்பூர் சபுராளிகளாக இருந்த போது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தான் ஊர் வருவார்கள். பெரும்பான்மை இன்றைய அரபு நாடு சபுராளிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டு மாத விடுமுறையில் ஊர் வந்து செல்கிறார்கள். சராசரி மனிதனின் ஆயுட்காலத்தில் "இளமை" என்பது 25 வயது முதல் 45 வயது வரை உள்ள 20 வருட காலகட்டம் தான்இந்த 20 வருட காலகட்டத்திலே 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 2 மாத விடுமுறையில் தாய்நாடு வந்து தன்னுடைய மனைவி மக்களோடு ஒன்றாக இருந்து இல்லறம் நடத்தக்கூடிய ஒரு சராசரி இஸ்லாமியரின் சந்தோசமான வாழ்க்கை என்பது அவரது ஆயுட்காலத்தில் இரண்டு வருடங்களுக்கும் குறைவு. சற்றே சிந்தித்திப்பாருங்கள்...! இப்படிப்பட்ட வாழ்க்கை சூழலிலும், இஸ்லாத்தின் நெறி தவறாத, புலன் அடக்கத்துடன் கூடிய கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற சீதேவிகள் நிறைந்த ஊர் நமது கூத்தாநல்லூர். ஒன்றோ அல்லது இரண்டோ ஒடுகாளிகளைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு கருத்து பரிமாற்றம் செய்து கொண்டிருக்கும் நாம் இப்படிப்பட்ட 98% சீதேவிகளைப்பற்றி சிந்தித்துப் பார்க்கிறோமா? அவர்களின் பெருமைகளைப் பேசுகிறோமா?? அவர்களை கண்ணியப் படுத்துகிறோமா???

அவரவர் தம் தாயைப் போற்றுவோம், தத்தம் சகோதரிகளை பெருமைப் படுத்துவோம். அவர்களை "ஆபத்து" எந்த ரூபத்திலும் நெருங்கிவிடாதவாறு கண்ணை இமை காப்பது போல் காப்போம். வல்ல நாயன் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுவோம்.

எனக்கும் யாரும் தனிப்பட்ட எதிரி கிடையாது. யாரையும் உதாசீனப் படுத்த வேண்டும் என்பதோ, சிறுமைப் படுத்த  வேண்டும் என்பதோ என் நோக்கம் அல்ல. எல்லா இயக்கங்களிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளிலும் எனக்கு பரிட்சயமான தலைவர்களும் நண்பர்களும் உண்டு. மத நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில் என் சமுதாய நலனையும் விட்டுக்கொடுக்காமல் குரல் எழுப்புவேன். என் சமூகத்திற்கு நன்மை செய்ய யார் முன்வந்தாலும் அவர்களோடு இணக்கம் காட்டுவேன். அதே நேரத்தில் "நான் யார்?" என்பதிலும் தெளிவாகவே இருக்கிறேன். என்னை ஒரு அறிவு ஜீவி என்றோ, மார்க்க அறிஞன் என்றோ மிகைப்படுத்திக் கொள்வதற்காக இப்படிப்பட்ட விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை. மார்க்க அறிவைப் பொறுத்த வரை, ஆரம்ப நிலையில் இருந்தே என் கற்றலை இப்போது தான் தொடங்கி இருக்கிறேன். "நம்மைச் சுற்றி நடக்கும் அநீதங்களை கரங்கள் கொண்டு தடுக்க வேண்டும். முடியாவிட்டால் நாவக்கை கொண்டு தடுக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் மனதிலாவது சபிக்க வேண்டும்" என்ற போதனைக்கிணங்க என்னால் இயன்றதை செய்கிறேன். என் தரப்பில் தவறுகள் இருந்தால், அவைகள் சுட்டிக்காட்டப்படும் பட்சத்தில், திருத்திக் கொள்ளவும் தயாராகவே இருக்கின்றேன். வஸ்ஸலாம்!
நட்புடனும், நன்றியுடனும்:
அன்சார்தீன் பாபு.

No comments:

Post a Comment