Koothanallur

Koothanallur
Land mark

Friday, 21 September 2012

மாற்றம் தேடும் கூத்தாநல்லூர்:

அன்பிற்கினிய நண்பர்களே...! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!


கூத்தாநல்லூரில் உள்ள பொது ஸ்தாபனங்கள் பற்றியும் அதன் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் பொம்மை தலைவர்கள் பற்றியும் விமர்சிக்கவும், வினா எழுப்பவும் நம்மில் சிலர் முன் வந்திருப்பதை மனதார வாழ்த்தி வரவேற்கிறேன். Koothanallur Flashnews என்ற முக நூலின் (Facebook) உண்மை முகம் யாரென்று தெரியாவிட்டாலும், இக்கட்டுரையாளர் இறுதி வரை தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் "பழைய மாணவன்"என்ற போர்வை போர்த்திக் கொண்டு "ஏதோ திரியை பற்ற வைப்போம், வெடித்தால் சரி!" என்ற நினைப்பில் செயல்பட்டிருந்தாலும் (இப்படிப்பட்ட பெயரில்லாத பிரசுரங்களுக்கும், ஈமெயில்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காததுடன், இவைகள் பல நேரங்களில் கலாச்சார கழிசடைகளாக உலா வருவதால் அவைகளை வெறுக்கக்கூடியவனாக இருந்த போதும்) சமூக அக்கறை சற்றே தூக்கலாக தெரிந்த அவரது இந்த முதல் முயற்சிக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்.

"
நமக்கேன் வம்பு" என்ற மனோபாவம் பொதுமக்களாகிய நம்மில் பலருக்கு மேலோங்கி இருப்பதாலும், இடித்துரைக்க யாரும் இல்லாத காரணத்தால் பதவியில் இருப்பவர்களில் பலருக்கு "தான்தோன்றித்தனம்" தலை தூக்கி இருப்பதாலும், நிர்வாகங்கள் நிலை குலைந்து, சமூக அவலங்கள் சகஜமாகி, நாளைய சமுதாயம் நலிவுறும் நிலைக்கு கூத்தாநல்லூர் தள்ளப்பட்டு வெகு காலமாகி விட்டது.

இதற்கு உதாரணம் தான் மன்ப உல்-உலா பள்ளியின் அடிப்படை நோக்கத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்ட நிர்வாகக் குளறுபடிகள், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதிகமான ஆண் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியத்தடை போன்ற நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்வுகள்.

பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தின் பிள்ளைகள் கல்வி அறிவு பெரும் கூடமாகத்தான் மன்ப உல்-உலா பள்ளி திகழ்கிறது. இப்பள்ளியின் கல்விக் கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதையும், ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும் பல மாணவர்களின் பெற்றோர்கள் பணம் கட்டுவதற்கு அல்லாடுவதையும், அடுத்தவர் உதவி தேடி அலைவதையும், சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்காதவர்களும், கொடை வள்ளல்களின் உதவி கிடைக்காதவர்களும் தங்கள் பிள்ளைகளின் கல்வியையே இடைநிறுத்தம் செய்யும் அவல நிலையை சுட்டிக்காட்டி இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பே என்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்து இருந்தேன்.

இதே கூத்தாநல்லூரிலேயே  தனியார் ஸ்தாபனமாக தனது சொந்த கல்வி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஜனாப். தமீஜுதீன் அவர்கள், அதே கல்வித் துறையைச் சார்ந்த அரசாங்க உதவி பெரும் பொதுத்துறை கல்வி நிறுவனமான மன்ப உல்-உலா பள்ளியின் தாளாளர் பதவியையும் எப்படி வகிக்கிறார்? சட்டப்படியும், தார்மீகப்படியும் இது தவறானது என்றும் சுட்டிக்காட்டி இருந்தேன். இப்பள்ளியின் தாளாளர் பதவிக்கு தகுதி படைத்த தனவான்கள் யாரும் நமதூரில் இல்லையா? என்றும் வினா எழுப்பி இருந்தேன். ஒரு கை ஓசையாகிப் போனதால் சத்தமே எழவில்லை. அன்று என் குரலுக்கு வலு சேராமல் காற்றில் கரைந்து போனதால், இன்று பள்ளியின் நிர்வாகக் கட்டுப்பாடு முழுவதும் தலைமை ஆசிரியர் திரு. உதயகுமார் அவர்களிடம் சென்று விட்டது.

ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்ற வகையிலே திரு. உதயகுமார் அவர்கள் பள்ளியின் கல்வித்தரத்தையும், தேர்ச்சி விகிதத்தையும் உயர்த்தும் நோக்கிலேயே சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்ற போதிலும், இப்பள்ளி தொடங்கப் பட்டதற்கான அடிப்படை நோக்கமான ஏழை எளிய இஸ்லாமிய மக்களின் கல்வி மேம்பாடு என்ற உயரிய நோக்கம் குறைந்தும், காலப்போக்கில் முற்றிலும் கரைந்தும் போய்விட்டது. ஏனென்றால் அந்த உயரிய நோக்கம் திரு. உதயகுமார் அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. புரிந்திருந்தும் அதை செயல் படுத்த வேண்டிய சமுதாய அக்கறை அவருக்கு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தான் ஒரு நல்லாசிரியர் என்றும் தலை சிறந்த பள்ளி நிர்வாகி என்றும் பெயர் எடுத்தால் போதும் என்று செயலாற்றினால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

மற்றபடி மாணவர் சேர்க்கை விசயத்தில் மத அடிப்படையிலே வேறுபாடு காட்டப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள செய்தி சற்றே மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்றே நம்புகிறேன். ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதென்னவோ உண்மை. ஜாமியா தொடக்கப் பள்ளியில் ஒரு கிறிஸ்தவ சகோதரி ஆசிரியை நியமனம் பெற ஐந்து லட்சம் லஞ்சம் கொடுத்ததாக மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு குற்றச்சாட்டு எழுந்து, பரபரப்பை ஏற்படுத்தி பின்பு புஸ்வானம் ஆகியதை நான் அறிவேன். இதைக்கூறுவதால் என் மீது ஏதும் சட்ட நடவடிக்கை பாய்ந்தாலும் அதை எதிர் கொள்ள தயாராகவே இருக்கிறேன்.

விகிதாச்சார அடிப்படையிலே ஆசிரியர்களில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது உண்மை தான். இஸ்லாமிய சமுதாய மாணவர்கள் பெரும்பான்மையாக படிக்கும் பள்ளியின் வார விடுமுறை வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றப்பட்டது கண்டனத்துக்கு உரியது தான். இதற்கு காரணம் யார்? நாம் தானே நண்பர்களே...! நம் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரதிநிதிகளாக இப்பள்ளி நிர்வாகத்தில் பதவி வகிப்பவர்கள் நம் உரிமைகளை விட்டுக் கொடுத்தல் தானே உண்மை காரணம்...! உரக்கக் குரல் கொடுத்து உத்வேகத்துடன் செயல் பட்டிருந்தால் இந்த நிலை நமக்கு ஏற்பட்டிருக்குமா? திண்ணையை காலியாக வைத்து விட்டு, அடுத்தவர் வந்து அமர்ந்ததும் "அய்யகோ...! என் உரிமை பறி போய் விட்டதே!" என்று பதறுகிறோம், கதறுகிறோம். தமிழ் கூற்றுப்படி சொல்லவேண்டுமானால் "தும்பை விட்டு வாலை பிடிப்பதே நம் வாடிக்கையாகி விட்டது".

இப்படிப்பட்ட விவாதங்களை நாம் முகநூலில் நடத்துவதோடு நிறுத்தி விடாமல், முறையான மனுவாக தயாரித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். ஈமெயில் அனுப்புவதோடு நிறுத்திக்கொள்ளாமல், (FAX) தொலை நகல் மூலமாகவும் நம் கோரிக்கை மனுக்களை அனுப்புவோம்.
CM Cell email ID: cmcell@tn.gov.in Fax No: +91 44 25676929.
Minorities Welfare Department email ID:  bcsec@tn.gov.in Fax No: +91 44 25670756    
Thiruvarur Collector email ID: collrtvr@nic.in Fax No: +91 4366 226045

அடுத்து, "மாற்று மதத்தினரோடு நெருங்கிப் பழகுவதால் தான் நம் படுக்கை அறைகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன" என்ற வாதத்தை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நம் சகோதரிகளுக்கு இஸ்லாமிய உணர்வையும், மார்க்க போதனைகளையும் சரிவர போதிக்காமல், நம் இல்லங்களில் இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றாமல்  இருப்பதே இந்த தவறுகளுக்கெல்லாம் காரணம். "அந்நியர்களோடு குழைந்து பேசக்கூடாது. மஹ்ரம் இல்லாத ஆண் துணையோடு பெண் தனித்து இருக்கக்கூடாது" என்ற இந்த இரண்டு இறை போதனைகளை சிரமேற்கொண்டு செயல்படுத்தினாலே இந்த தவறுகள் தடுக்கப்பட்டு விடும்.

"
அவன் என் மகன் மாதிரி, அவன் என் உடன் பிறவா சகோதரன், அவன் யோசனை கேட்காமல் நாங்கள் எதுவுமே செய்ய மாட்டோம், அவன் தான் எங்கள் குடும்ப நிர்வாகத்தையே கவனிப்பவன்" என்று எத்தனையோ சப்பை கட்டுக்களை கேட்டிருக்கிறோம். இப்படி எத்தனையோ "அவன்களை" வாசல் தாண்டி வீட்டுக்குள்ளே அனுமதிக்கிறோம். அப்படிப்பட்ட "அவன்கள்" குடும்பத்தை மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து கவனித்து விட்ட பிறகு, அவச் சொல்லுக்கு ஆளாகி அவமானப்பட்டு நிற்கிறோம்! இந்த "அவன்களுக்கு" மதச் சாயம் பூசாதீர்கள். என்ன தான் ஆர்.எஸ்.எஸ். சதி வலை பின்னினாலும், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது.

இப்படிப்பட்ட
நிகழ்வுகளில் எவனும் வீடு புகுந்து யாரையும் தூக்கிச் செல்லவில்லை. மாறாக, பெண்கள் இஷ்டப்பட்டு செல்கிறார்கள் என்பது தான் நிதர்சன உண்மை. கார் டிரைவர், ஆட்டோ டிரைவர், கொத்தனார், ஆசாரி, வட்டிக்காரன், பால்காரன் என்று பரிணாம வளர்ச்சி பெற்று இன்று...??? எந்த நிலைக்கு நம் சமுதாயம் வந்து நிற்கிறது பாருங்கள். “First come, first served” என்ற ஆங்கில சொல்லுக்கு நிகராக யார் முதலில் வந்து முயற்சிக்கிறானோ, அவனோடு ஓடக்கூடிய பலகீனமானவர்களாக பெண்கள் இருப்பதை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

நம் சகோதரிகளை இஸ்லாமிய போதனைகள் எனும் தணலில் இட்டு பத்தரை மாற்று தங்கங்களாக ஜொலிக்க வைத்து விட்டால், அந்த தங்கங்களை எந்த கல்லாலும் உரசிப்பார்க்க முடியாது. பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். அதிலும் பருவப்பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். அப்படிப்பட்ட பெண்மணிகளை அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வேலியாக இருந்து பயிரைக்  காப்பது போல் காக்க வேண்டும்.


நெஞ்சம் நிறைந்த வேதனைகளுடன்:

அன்சார்தீன் பாபு.

No comments:

Post a Comment