"தேர்தல் என்றாலே அது அரசியல்வாதிகளுக்கு தான் சொந்தம்" என்பது போலவும், "பொது மக்களாகிய நாம் எல்லாம் எதாவது ஒரு அரசியல் இயக்க வேட்பாளரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று நிலவும் மாயையை தகர்க்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமே தவிர "சுயேட்சைகள்" மட்டுமே தகுதியானவர்கள் என்று எந்த ஒரு புதிய மாயையையும் உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை.
ஒரு வேளை சாம்பார் வைப்பதற்கு வாங்கும் கால் கிலோ கத்தரிக்காயையே, "சொத்தை இருக்கிறதா? அழுகி இருக்கிறதா? முத்தலாக இருக்கிறதா?" என்று குறைந்தது பத்து முறையாவது பார்த்து பார்த்து வாங்கும் நம் மக்களால், தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்கும் போது அப்படி ஒரு தரம் பார்த்து தேர்ந்து எடுக்கும் குணம் கொள்வதில்லையே... அது ஏன்??? என்ற ஆதங்கம் கூட எங்களின் இந்த முயற்சிகளுக்கு ஒரு காரணம். "அப்படி ஒரு முயற்சியை நம் மக்கள் எடுத்து விடக்கூடாது" என்று அரசியல் வாதிகள் நம் மக்களை பழக்கப்படுத்தி விட்டார்களோ??? என்ற சந்தேகமும் எங்களின் இந்த முயற்சிகளுக்கு மேலும் ஒரு காரணம்.
அரசியல் அமைப்புகளுக்கோ, நேர்மையான அரசியல் வாதிகளுக்கோ நாங்கள் எதிரிகள் அல்ல. அதே போன்று தகுதி இல்லாத "சுயேட்சைகளுக்கும்" நாங்கள் ஆதரவாளர்கள் அல்ல. எங்களின் நோக்கம், மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். மக்கள் சுய சிந்தனையோடு, தகுதி வாய்ந்தவர்களையே தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எங்கள் அவா!
அதே போன்று பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் தான் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை, சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும், அப்படி வழங்கப்பட்ட அங்கீகாரத்தையும் அதிகார துஷ்பிரயோகமாக பிடுங்க கூடாது என்று தான் கருத்துரைக்கிறோம். இதற்கு உதாரணம் நம் ஊரின் நகராட்சி மன்ற தலைவர் பதவி BC இடமிருந்து SC கோட்டாவாக மாற்றப்பட்டிருப்பதே!