அன்பார்ந்த நல் உள்ளங்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!
நடைபெற்ற நமதூர் நகராட்சி மன்ற தேர்தலிலே 21வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பெண்களுக்கான இடஒதுக்கீடு அடிப்படையிலே எனது தாயாரை தேர்தல் களம் காணச்செய்தோம்.
"பதவி சுகம் அனுபவிக்க அல்ல இந்த தேர்தல் களம்...பொது நலப்பணியாற்ற பதவி ஓர் கூடுதல் பலம்" என்ற அழகிய வார்த்தை விளக்கத்தின் மூலம் எங்களின் உண்மை நோக்கத்தை ஊர்ஜிதப்படுத்தி விட்டுத்தான் வேட்பு மனுவே தாக்கல் செய்தோம். களப்பணியாற்றத்தொடங்கிய காலம் தொட்டே எங்களின் நிலைப்பாட்டை நிர்ணயம் செய்து கொண்டோம். "வெற்றி என்பது எங்களின் இரண்டாம் இலக்கு...,மக்களை விழிப்புணர்வடைய வைப்பதே எங்களின் முதல் இலக்கு!" என்பதில் உறுதியாய் இருந்தோம். அதன் அடிப்படையில் வியூகம் அமைத்தே எங்கள் வேலைகளைத் தொடங்கினோம்.
இக்கடிதத் தொடக்கத்தில் இருந்தே பன்மையில் கூறி வருவதால் ஏதோ மிகப்பெரிய படை பலத்தோடு தேர்தல் களத்தில் குதித்தோம் என்று தப்புக்கணக்கு போட்டு விட வேண்டாம். தொடக்கம் முதல் இந்நிலை தொட்டது வரை என் தோளோடு தோள் நின்று, எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல், எந்த ஒரு பிரதி பலனும் எதிர் பாராமல், சமுதாய நலன் ஒன்றையே பிரதானமாக கருதி பணியாற்றிய என் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய நண்பர் அ.கு.அ.முஹம்மது சலீம் அவர்களை நினைவில் நிறுத்தி நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஆகவே நாங்கள் இருவர் மட்டுமே கை கோர்த்து களம் கண்டோம். தேர்தல் களப் பணியாற்றியதற்கான பலன் கொண்டோம்.
நமது 21வது வார்டில் ஆண்கள் 330, பெண்கள் 426 என மொத்தம் 756 வாக்காளர்கள். தேர்தல் தினத்தன்று ஆண்கள் 181, பெண்கள் 316 என மொத்தம் 497 பேர் வாக்களித்தனர். இறுதியில் வாக்கு எண்ணப்பட்டதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சகோதரி சப்ரினா பர்வின் 99 வாக்குகளும், ம.ம.க. சார்பில் போட்டியிட்ட சகோதரி ஜம்ஜம் நிசா 101 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட அம்மா நூர்ஜகான் 108 வாக்குகளும் பெற்ற நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சகோதரி பாத்திமா ரிபாயிதா 189 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
"ஐம்பது வாக்குகள் என்ற எண்ணிக்கையை அடைந்தாலே இந்த தேர்தல் களம் கண்ட நோக்கத்தின் பலனைப் பெற்றதாக கருதலாம்!" என எண்ணியிருந்த எங்களுக்கு 108 வாக்குகள் அளித்து இரண்டாம் இடம் அளித்த 21வது வார்டு வாக்காளர்களை நன்றிப்பெருக்கோடும், பெருமிதத்தோடும் பார்க்கிறோம்.
ஊழலுக்கு எதிரான எங்களின் நிலைப்பாட்டையும், நிலைப்பாட்டில் இருந்த எங்களின் உறுதியையும் கண்டு எங்களை ஊக்குவித்த கூத்தாநல்லூர் நகர பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (POPULAR FRONT OF INDIA - PFI) இயக்க நண்பர்களுக்கும், எதிர் காலத்தில் எங்களை அரவணைத்து வழி நடத்த உறுதி அளித்த சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SOCIAL DEMOCRATIC PARTY OF INDIA - SDPI) அரசியல் அமைப்பின் மாநிலத் தலைமைக்கும், அக்கட்சியின் மற்ற மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.
வெளிநாட்டில் இருப்பதால் வாக்களிக்கும் வாய்ப்பினை தவற விட்டு, அதனால் எங்களின் இந்த எழுச்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியாமல் போனதற்காக வருத்தப்பட்ட வெளிநாட்டு வாழ் அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலிலே இதே போல் போட்டியிட்டு வெறும் 13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து, மீண்டும் இம்முறை போட்டியிட்டு 101 வாக்குகள் பெற்ற சகோதரி ஜம்ஜம் நிசா அவர்களை வாழ்த்துகிறோம்.
சகோதரர் சகாபுதீன் அவர்கள் கூற்றுப்படி, சந்தர்ப்பவசத்தால் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டும் 99 வாக்குகள் பெற்ற சகோதரி சப்ரினா பர்வின் அவர்களையும் வாழ்த்துகிறோம்.
இறுதியாக 189 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற சகோதரி பாத்திமா ரிபாயிதா அவர்களை வாழ்த்துவதோடு, இந்த வெற்றியை கடந்த கால நகராட்சி நிர்வாகத் தவறுகளை மறைக்க உதவும் திரையாக பயன் படுத்தாமல், தவறு செய்தவர்களின் முகத்திரை கிழிக்க உதவும் கருவியாக பயன்படுத்த வேண்டுகிறோம். இந்த வார்டில் மலிந்திருக்கும் சுகாதார சீர்கேடுகளை போக்குவதற்கு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு, வார்டு நல மேம்பாட்டிற்கு உரியக்குரல் எழுப்பி, உறுப்பினர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக விளங்க வாழ்த்துகிறோம்.
இந்த தேர்தல் தோல்வி என்பது எங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல. தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தாலும் எங்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றே இருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நமது நகராட்சி நிர்வாகத்தில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 80 லட்ச ரூபாய் வீதம் மொத்தம் நான்கு கோடி ரூபாய் பல்வேறு ஊழல்கள் மூலம் சுரண்டப்பட்டிருப்பதையும், சாலை பராமரிப்புக்காக கடந்த கால அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற மூன்று கோடி ரூபாயில், ஏறக்குறைய ஒன்றரை கோடி ரூபாய் போடாத சாலைகள் பெயரை எல்லாம் சொல்லி சுரண்டப் பட்டிருப்பதையும் மக்கள் மத்தியிலே வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை எங்களையே சாரும். மேலும் தகவல் உரிமை சட்டத்தினை பலருக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையும் எங்களையே சாரும் என்பதை சற்று கர்வம் கலந்த பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, நாங்கள் வரையறுத்த கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் பல்வேறு வேட்பாளர்களும் தங்களின் உறுதி மொழிகளாகவும், வாக்குறுதிகளாகவும் தந்ததை பார்க்கையில், ஒரு மக்கள் பிரதிநிதி இனி வரும் காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்ற விதியை எழுதிய பெருமையும் எங்களையே சாரும் என்பதை எண்ணியும் பெருமிதம் கொள்கிறோம்.
இது போன்ற எங்கள் சமுதாய நலப்பணி தொடர உங்கள் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும், ஆதரவையும் வேண்டுகிறோம்.
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்,
அன்சார்தீன் பாபு.