Koothanallur

Koothanallur
Land mark

Tuesday, 9 August 2011

"ஒளிச்சுடர் ஏற்றுவோம்! ஊழல் வழித்தடம் மாற்றுவோம்!"

அன்பார்ந்த தாங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...!)


இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கடந்து விட்டது. நம் சுதந்திர தேசத்தின் வரலாறு காணாத ஊழல்கள் வெளிப் பட்டுக்கொண்டிருக்கும் இதே கால கட்டத்தில் தான் ஊழலுக்கு எதிரான குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளன. அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் "லோக் பால் மசோதா" வேண்டி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத்துணிந்து போராடும் இந்த காலக்கட்டத்தில் வாழும் நாமும், நம் தேச நலனுக்காக ஒரு சிறு துறும்பு அளவு பங்களிப்பையாவது செய்யத் தவறினால் வரலாற்றுப்பதிவுகள் நம்மை வசை மாரி பொழியும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உறங்கிக்கிடக்கும் "அன்னா ஹசாரே" என்ற உணர்வை தட்டி எழுப்ப வேண்டிய தருணம் வந்து விட்டது. 74 வயதை கடந்து விட்ட இந்த சமூக நல ஆர்வலரின் சொல் பாரதப்பிரதமரையே செவி சாய்க்க வைக்கிறதென்றால், "நம்மாலும் முடியும்...!" 

ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படை அஸ்திவாரமே உள்ளாட்சி கட்டமைப்புகளில் இருந்து தான் தொடங்குகிறது
. நாம் வாழும் பகுதிக்கே, நமக்குத்தேவையானவற்றை, நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழல் இருக்குமேயானால், ஜனநாயக நாட்டில் சுதந்திரமான முறையில் நாம் வாழ்வதாக கூறுவது நம்மை நாமே கேலி செய்து கொள்வதற்கு ஒப்பாகும்உள்ளாட்சி முறையில், நாம் வாழும் பகுதியை நிர்வகிக்க அதன் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நம் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு கூத்தாநல்லூர் பகுதி வாழ் மக்களாகிய நாம் வரி செலுத்துகிறோம். நம் ஊர் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, சுகாதார வாழ்க்கைக்காக, சுற்றுச்சூழல் நலனுக்காக இந்த நகராட்சி நிர்வாகம் நமக்கு என்ன திருப்பி செய்திருக்கிறது? நகராட்சி நிர்வாக அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் சீரழிந்த சாலைகள், குப்பை மேடான தெரு முனைகள், முறையற்ற சாக்கடை அமைப்புகளால் பல பகுதிகளில் கழிவு நீர் தேக்கங்கள், கொசு உற்பத்திப்பண்ணையாக விளங்கும் கூத்தாநல்லூரின் பகுதிகள், எரியாத தெரு விளக்குகளால் இருண்டு கிடக்கும் பல பகுதிகள் என நம் ஊரில் நிலவும் அவலங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்


இதெற்கெல்லாம் காரணம்
, உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் அரசியலை நுழைய விட்டு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களையே நம் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுப்பது தான். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் சார்ந்த கட்சிகளின் கொள்கைகளை பிரதானப்படுத்தியும், கட்சியில் தங்களின் செல்வாக்கை உயர்த்திக்கொள்வதற்காக வேண்டியும் செயல் படத் துவங்குவதால், வெற்றி பெற்ற வெகு விரைவிலேயே "பொது நலம்" பின்னுக்குத்தள்ளப்பட்டு "சுய நலம்" தலைக்கேறி விடுகிறது.

மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதவியை பயன்படுத்த தவறும் இவர்கள் தங்களின் கவுரவத்திற்கு பெருமை சேர்ப்பதற்கும்
, சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதற்கும் மட்டுமே பயன் படுத்துவதால், நாம் வாழும் பகுதியின் மேம்பாடு தடைப்பட்டு, பொது மக்களாகிய நமக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகிறது. தவறு இழைக்கும் அதிகாரிகளை தட்டிக்கேட்டு, நிர்வாகத்தை நெறிப்படுத்த வேண்டியவர்களே நாளடைவில் அந்த அதிகாரிகளின் தவறுகளுக்கும் துணை போய் விடுகிறார்கள்.

மக்களின் அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி, அதற்கு தீர்வு காண்பதற்காக போராட வேண்டிய சூழல் வரும்போது "ஆளும் கட்சி" உறுப்பினர்கள் தங்கள் அரசை எதிர்த்தே போராட முடியாமல் ஒதுங்கிக்கொள்கிறார்கள். "எதிர்கட்சி" உறுப்பினர்களோ, ஆளும் கட்சியை எதிர்த்து எங்களால் என்ன செய்ய முடியும்? என்று சப்பை கட்டு கட்டிவிட்டு, மக்கள் பிரச்சனைகளை மறந்தும், மறைத்தும் விட்டு, முடிந்த வரை பிரதான அரசியல் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் அனுசரித்துப் போய் விடுகிறார்கள். மக்கள் பிரச்சனைக்காக எந்த வார்டு பிரதிநிதிகளாவது எதாவது ஒரு போராட்டம் நடத்திய சான்று இருக்கிறதா? என்ற கேள்வியின் பதிலில் இந்த வாதத்தின் நியாயம் புரியும்.

நகராட்சி பகுதியில் முன் அறிவிப்பு இல்லாமல் அமல் படுத்தப்படும் மின்வெட்டுகளுக்கு காரணம் கேட்டு போராடி இருக்கிறார்களா? குறைந்த மின் அழுத்த மின் விநியோகிப்புக்கு காரணம் கேட்டு போராடி இருக்கிறார்களா? நம் ஊரில் மிகக்குறைந்த அழுத்த (LOW VOLTAGE) மின்சாரமே விநியோகிக்கப்படும் உண்மை எத்தனை மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரியும்? சாலை சீரமைப்பு, சாக்கடை சீரமைப்பு பணிகள் நடைபெறும் போது "அந்த வேலையின் மதிப்பீடு என்ன? அந்த வேலையை எடுத்து செய்யும் ஒப்பந்தக்காரர் யார்அவரை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் என்ன?" போன்ற விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று எந்த வார்டு பிரதிநிதியாவது வற்புறுத்தி இருக்கிறார்களா? இது போன்ற பணிகள் நடைபெறும் போது எந்த வார்டு பிரதிநிதியாவது அருகில் இருந்து கண்கானித்து இருக்கிறார்களா? தவறு செய்யும் ஒப்பந்தக்காரர்களை தட்டிக் கேட்டிருக்கிறார்களா? உதாரணத்திற்காக ஒரு சிலவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட்டு உள்ளோம். இது போன்று இன்னும் எத்தனையோ கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சமீபத்திலே நம் ஊரின் உள்பகுதிகளில் சீரமைக்கப்பட்ட சாலைகளின் தரத்தையும், கட்டப்பட்ட சாக்கடைகளின் நிலையை கண்டும், பெரியப்பள்ளி குளம் அருகில் தெருவின் குறுக்கே அமைக்கப்பட்ட சாக்கடை ஓடுவதற்காக வேண்டி கட்டப்பட்ட சிறிய பாலம் மற்றும் ஆலி விடுதிப்பள்ளி அருகில் தெருவின் குறுக்கே அமைக்கப்பட்ட சாக்கடை ஓடுவதற்காக வேண்டி கட்டப்பட்ட சிறிய பாலத்தின் முடிவைக் கண்ட பின்பும், மேற்படி கேள்விகளை மறுத்துப்பேச எந்த மக்கள் பிரதிநிதியாவது முன் வருவார்களா? பொதுமக்கள் தங்கள் பகுதியின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கும், புகார் மனு அளிப்பதற்கும் வசதியாக இவர்கள் என்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்? தங்களுக்கு வரும் போன் அழைப்புக்களையாவது ஏற்று, குறைந்த பட்சம் போனிலாவது பேசுகிறார்களா? என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

எந்த பிரதான அரசியல் கட்சி ஆட்சி அமைத்தாலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்கிறார்கள். உதாரணமாக முதியோர் உதவித்தொகை, படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம், ஏழைப்பெண்களுக்கு மகப்பேறு கால உதவித் திட்டம் போன்ற திட்டங்களை குறிப்பிடலாம். தகுதி இருந்தும் இந்த திட்டங்களின் கீழ் உதவி பெற வழி வகை தெரியாமல் தவிக்கும் மக்கள் எவ்வளவோ பேர்கள் நம் பகுதியில் வசிக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களை கண்டறிந்து எத்தனை பேர்களுக்கு உதவி கிடைக்க வழி செய்திருக்கிறார்கள் இன்றைய மக்கள் பிரதிநிதிகள்? எத்தனை மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்க வங்கிகளில் பரிந்துரை செய்திருக்கிறார்கள்? இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எத்தனை மாணவர்களுக்கு கல்லூரிகளில் நன்கொடை இல்லாமல் இடம் கிடைக்க உதவி புரிந்து இருக்கிறார்கள்? கல்வியாண்டு தொடக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அட்மிஷன் நடைபெறும் காலக்கட்டத்தில் அத்தியாவசிய தேவையான ஜாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்றவை நம் பகுதி மாணவர்களுக்கு கிடைக்க என்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்? இதெற்கெல்லாம் முத்தாய்ப்பாக இன்றைய மக்கள் பிரதிநிதிகளில் எத்தனை பேர்களிடம் தங்களுக்கான "லட்டர் பேடு மற்றும் ரப்பர் ஸ்டாம்ப்" இருக்கிறது? யாருடைய தகுதியையும் குறைத்து மதிப்பிடும் நோக்கம் அல்ல, மாறாக பொது மக்களின் தகுதி குறைந்து போய் கிடக்கிறதே! என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் இந்த வரிகள்.

இவற்றுக்கெல்லாம் எதிர் வாதமாக "இவை எல்லாம் எங்கள் வேலை இல்லையே!" என்ற பதிலை இவர்கள் சொல்லக்கூடும். தனி மனிதனாக எந்த ஒரு துறையிலும் நுழைந்து எதையும் சாதிக்க முடியாத சராசரி மக்கள் மத்தியிலே, அதே மக்கள் வாக்களித்து, அவர்களால் வழங்கப்பட்ட பதவிகளைக்கொண்டு "இவற்றையெல்லாம் ஏன் அவர்களுக்கு நீங்கள் செய்து கொடுக்கக்கூடாது???" என்பதே எங்கள் கேள்வி. இப்படியெல்லாம் செயலாற்றத்தெரியாத, செயலாற்ற முடியாத நீங்கள் எல்லாம் ஏன் பதவியில் அமரத் துடிக்கிறீர்கள்? என்பதும் எங்கள் கேள்வி.

இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். விடை தெரியாத வினாக்களின் எண்ணிக்கை விண்ணைத்தொடும். ஆகவே இவற்றுக்கெல்லாம் விடை காண வேண்டிய வேலையை நாமே தொடங்க வேண்டும். பொதுவாக நம் எல்லோராலும் அநியாயங்களையும், அக்கிரமங்களையும் கண்டு வெகுண்டு எழுந்து வீதியில் இறங்கி போராட முடியாது தான். நம் சொந்த சூழல், குடும்ப சூழல் கருதி பல நேரங்களில் பல விஷயங்களில் கண்டும் காணாமல் போக வேண்டிய நிலையே ஏற்படுவது உண்மை தான். ஆனால் அரிய வாய்ப்பு நம் விரல் தேடி வரும் போது, அதையும் விட்டுவிட்டு விழி பிதுங்கி நின்றோமானால், நடைபெறும் தவறுகளுக்கு நாமே முழு பொறுப்பு ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

"அப்படி என்ன வாய்ப்பு விரல் தேடி வருகிறது?" என யோசிக்கிறீர்களா? நெருங்கி வரும் உள்ளாட்சித்தேர்தலை நினைவுறுத்தித்தான் "விரல் தேடி வரும் வாய்ப்பு" என்று சூசகமாக குறிப்பிட்டுள்ளோம். இந்த தேர்தலைக் கொண்டு நம்மால் ஒரு மௌனப்புரட்சியே நிகழ்த்திக்காட்ட முடியும்! நம்முடைய இந்த வழிமுறையை எதிர்காலத்தில் இந்திய தேசமே பின்பற்றும் நிலை உருவாகலாம்..., உருவாக வேண்டும்...! "இருட்டு" என்று புலம்புவதை விட்டுவிட்டு அங்கே ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவோம். நாம் ஏற்றும் ஒரு சுடர் பல்கிப் பெருகி, வெளிச்ச விருட்சமாகி இந்தியாவின் இருள் நீக்கட்டும்.

"அப்படி என்ன வழி அது?" என்று நெற்றிச்சுருக்குகிறீர்களா? உள்ளாட்சி அமைப்புக்களை அந்தந்த பகுதி வாழ் மக்களே கைப்பற்ற வேண்டும். அதற்கு பொது நலனில் அக்கறை கொண்ட, மக்கள் நலப்பணி ஆற்றுவதற்கு ஆர்வம் கொண்ட சமூக நல ஆர்வலர்கள் தங்கள் குடியிருப்பு பகுதியிலோ, அல்லது தங்களுக்கு செல்வாக்கு மிக்க பகுதியிலோ வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளர்களாக போட்டியிட வேண்டும். "வெற்றி மட்டுமே குறிக்கோள் என்று இல்லாமல், மக்களிடையே ஓட்டுக்காக கை ஏந்தாமல், நீங்கள் போட்டி இடுவதற்கான காரணத்தை மக்களுக்கு தெளிவாகச் சொல்ல வேண்டும். பகுதி வாழ் மக்களின் பிரதிநிதியாக வெற்றி பெறுபவர்கள் யாராக இருந்தாலும், எதிர்காலத்தில் அவர்கள் எப்படி செயல் பட வேண்டும் என்பதையும், அவர்களை எப்படி செயல் பட வைக்க வேண்டும் என்பதையும் மக்களிடம் விளக்கிச்சொல்லி விட்டோம் என்றால், அவர்கள் விழிப்புணர்வு பெற்றுவிடுவார்கள்.

அதற்கான வாய்ப்பை பெற ஒவ்வொரு வார்டுகளிலும் சமூக நல ஆர்வலர்கள் "சுயேட்சை" வேட்பாளர்களாக போட்டியிட முன் வர வேண்டும். 24 வார்டுகளைக்கொண்ட கூத்தாநல்லூர் நகராட்சியில் 13 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலே நகராட்சியின் "சேர்மேன்" பதவியும், நிர்வாகப்பொறுப்பும் கூத்தாநல்லூர் மக்களின் கைகளுக்கு வந்து விடும். "நாமே நிர்மாணிப்போம்...! நாமே நிர்வகிப்போம்...!" என்ற உயர்நிலைக்கு வந்துவிடுவோம். ஒரு நகராட்சியின் நிர்வாகத்தை சுயேட்சை வேட்பாளர்களைக் கொண்டு அப்பகுதி மக்களே கைப்பற்றிய அதிசயம் நிகழ்ந்து விட்டால், இந்தியாவே நம்மை திரும்பி பார்க்கும்.

நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் எதாவது ஒரு பிரதான அரசியல் கட்சியின் உறுப்பினராகவோ, அனுதாபியாகவோ இருப்போம். அந்த வகையில் "எதற்காக நாம் சுயேட்சை வேட்பாளர்களின் வெற்றிக்கு துணை போக வேண்டும்?" என்று எண்ணலாம். "எதற்காக இப்படி ஒரு மாற்றத்திற்கு வித்திட வேண்டும்?" என்றும் எண்ணலாம். அப்படிப்பட்ட எண்ணம் கொள்பவர்களே! தயவு செய்து http://municipality.tn.gov.in/Koothanallur என்ற கூத்தாநல்லூர் நகராட்சியின் இணைய தளத்தில் தொடர்பு கொண்டு அதன் நிர்வாகச் செயல்களையும், திட்ட அறிக்கைகளையும், வரவு-செலவு கணக்கு அறிக்கைகளையும் காண நேர்ந்தால், "உங்களின் வரிப்பணம் உங்கள் பகுதி மேம்பாட்டிற்காக எப்படி எல்லாம் பயன் படுத்தப் பட்டிருக்கிறது???" என்ற உண்மை நிலையை அறியலாம். அரசியல் சார்பு நிலைக்கு அப்பாற்பட்டு, "எவ்வளவு விரைவில் நம்மால் இந்த நிர்வாகத்தை மீட்டு எடுக்க வேண்டுமோ, அவ்வளவு விரைவாக நாம் செயல் பட வேண்டும்!" என்ற உத்வேகம் ஒவ்வொருவருக்கும் தோன்றும். அப்படி தோன்றிய உத்வேகத்தின் உந்துதல் தான் இந்த கடிதத்திற்கான உண்மை காரணம்.

ஏதோ எங்களால் இயன்ற வகையில் இப்படி ஒரு கடிதத்தை எழுதியமைக்கும், தங்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு இத்தனை பக்க கடிதத்தை தாங்கள் பொருமையாக படித்தமைக்கும் ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக் கொள்வதோடு நம்முடைய கடமை முடிந்து விட்டது என்று கருதாமல், இந்த கருத்தை இன்னும் எப்படி எல்லாம் செம்மைப்படுத்தி, சீர் படுத்தி, செயல் படுத்தலாம் என சிந்திக்கத் துவங்குவோம். ஒரு கரத்தால் ஓசை எழுப்ப முடியாது என்பதால், நாம் அனைவரும் கரம் கோர்ப்போம். ஒருவருக்கு ஒருவர் கருத்துப்பரிமாற்றம் செய்வோம். தேர்தல் களம் காணத்துணியும் சமூக நல ஆர்வலர்களை அடையாளம் காண்போம். அவர்களை பொது மக்களுக்கு அறிமுகம் செய்வோம். மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அத்தியாவசியத்தை உணர்த்துவோம். வெற்றி பெற்ற பின், கூத்தாநல்லூர் வாழ் மக்களில் எந்த ஒரு தனி மனிதரின் நியாயமான கோரிக்கையையும் ஆறு மாத காலத்திற்குள் நிறைவேற்ற முடியாமல் போனால் "பதவியை ராஜினாமா செய்வோம்!" என்று உறுதிமொழி அளிப்போம். வெற்றி கை நழுவினாலும் கவலைப்படாமல், இனி வரும் காலங்களில் "மக்கள் பிரதிநிதிகள்" எப்படி செயல்பட வேண்டும் என்ற விதி எழுதுவோம்.

"நாமே நிர்மாணிப்போம்...! நாமே நிர்வகிப்போம்...!" என்ற முழக்கத்தை கூத்தாநல்லூர் முழுவதும் ஒலிக்கச்செய்வோம். மாற்றத்திற்கான வித்திடுவோம்! மாற்றத்திற்கான விதி செய்வோம்!! மாற்றத்தை பெற்றிடுவோம்!!!

நன்றி!!!

இப்படிக்கு,

சமூக நல ஆர்வலர்கள் சார்பில் உங்கள் சகோதரன்,
Ansardeen Babu.


பின் குறிப்பு:

வெளிநாடுகளில் வாழும் கூத்தாநல்லூரைச் சேர்ந்த அன்பு நண்பர்கள் இந்தக் கடிதத்தில் புதைந்திருக்கும் உண்மையான உணர்வுகளை புரிந்து கொண்டு எங்கள் கருத்துக்களுக்கு வலு சேர்க்க வேண்டுகிறோம். மேலும் உங்களின் மேலான ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறோம். http://koothanallurpoliticalreformists.blogspot.com  என்ற இணைய தளத்தில் ஆக்க பூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் செய்ய அழைக்கின்றோம். இந்த கருத்துக்களுக்கு உங்களிடையே உடன்பாடு ஏற்பட்டுவிட்டால், உள்ளூரில் வாழும் உங்கள் உறவினர்களிடம் எடுத்துச் சொல்லி, "நாமே நிர்மாணிப்போம்...! நாமே நிர்வகிப்போம்...!" என்ற நமது நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் பகுதியில் போட்டியிட இருக்கும் "சுயேட்சை" வேட்பாளருக்கே வாக்களிக்கச் சொல்லி வலியுறுத்துங்கள்...!

6 comments:

  1. நமது ஊர் நலனுக்காக பாடுபடும் தாங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. மிக முக்கியமானச் சமூகப் பணியினை
    பூனைக்கு மணி கட்டியது போல்
    முன்னின்று துவங்கி இருக்கும்
    அண்ணன் அன்சாருதீன் பாபு அவர்களுக்கு
    என் நெஞ்சார்ந்த வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தொடருவோம்...

    நாமே நிர்மாணிப்போம்...
    நாமே நிர்வகிப்போம்...

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை இது நமதூர் மக்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை உண்டு பண்ணும் என்று நம்புகிறேன்...
    எனது மனமார்ந்த நல வாழ்த்துக்கள் பல பல .....
    என்றென்றும் அன்புடன்
    அகமது நசீர்
    துபாய்

    ReplyDelete
  4. Dear Babu,
    I am with you, go ahead and inform all your good view and I will be with you. Your good move always welcome.
    Best regards,
    Nathar Ali.

    Thank you Naseer & Nathar for your moral support.

    ReplyDelete
  5. Dear fellow brothers of KNR, first of all form a graduate association in KNR. Lets sit and brainstorm for sometime. We must remove the person who occupy the seat just for the sack of political benefits. We need qualified dynamic persons in the seat to manage our forefathers wealth given to us.

    ReplyDelete
  6. Dear Babu,
    I am with you, go ahead and inform all your good view and I will be with you. Your good move always welcome.

    Best regards,
    Rahmathullah

    ReplyDelete